தூய ஆரோக்கிய அன்னை தமிழ் கத்தோலிக்க பங்கின் பங்குத் தந்தையாக அருட்பணி பீற்றர் ஜித்தேந்திரன் அடிகள் திருநிலைப்படுத்தப்பட்டார்
ரொறன்ரோ துணை ஆயரும், ரொறன்ரோ உயர் மறைமாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பாகப் பணி புரிபவருமான ஆயர் அதிவண. வில்லியம் மக்கிரற்ரன் ஆண்டகையால், தமிழ் கத்தோலிக்க மக்களுக்கென ரொறன்ரோ உயர் மறைமாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தூய ஆரோக்கிய அன்னை பங்கின் புதிய பங்குத் தந்தையாக அருட்பணி பீற்றர் ஜித்தேந்திரன் அடிகள் திருநிலைப்படுத்தப்பட்டார். ஸ்காபரோ தூய திரேசா ஆலயத்தில் ஐனவரி 8ஆம் நாள் பலநூற்றுக் கணக்கான இறைமக்கள் மத்தியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஸ்காபரோ தூய திரேசா ஆலயத்தில் மாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற ஞாயிறு திருப்பலியில் (ஐனவரி 8ஆம் நாள்); பலநூற்றுக்கணக்கான இறைமக்களும் ரொறன்ரோவில் பணிபுரியும் தமிழ் கத்தோலிக்க குருக்களான தூய திரோசா ஆலய பங்குத்தந்தை அருட்பணி இராஐரட்ணம் அடிகள், அருட்பணி பற்றிக் ஞானப்பிரகாசம் அடிகள், அருட்பணி மொன்பேட் அடிகள், அருட்பணி ஜோ ஸ்ரனிஸ்ரன் செல்வநாயகம் அடிகள் ஆகியோரும் கலந்து கொள்ள இந்நிகழ்வு திருப்பலியோடு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் ஆயர் வில்லியம் மக்கிரற்ரன் ஆண்டகை அவர்கள் தமிழ் பண்பாட்டிற்கமைய மலர் மாலை சூட்டி வரவேற்கப்பட்டு குத்து விளக்கில் தீபமேற்றி வழிபாடுகள் வருகைப்பாடலுடன் ஆரம்பமாகியது. இறைவாக்கு வழிபாட்டைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் ஆண்டின் முதல் ஞாயிறில் கொண்டாடப்படும் திருக்காட்சி விழா பற்றி மறையுரை ஆற்றி இறைவனைத் தேடும் திருப்பயணத்தில் மூன்று ஞானிகளுடன் சேர்;ந்து நாமும் இறைவனைத் தேட அழைப்பு விடுத்தார்.
தூய ஆரோக்கிய அன்னைப் பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்பணி பீற்றர் ஜித்தேந்திரன் அடிகளாரைத் திருநிலைப்படுத்தும் நிகழ்வு அடுத்து இடம்பெற்றது. ஆயர் அவர்கள் புதிதாக பணியேற்கும் அருட்பணி பீற்றர் ஜித்தேந்திரன் அடிகளாருக்கு திருச்சபையின் கடமைகள் பற்றியும் மீட்புப்பணியில் இறைமக்களை அழைத்துச் செல்லும் சிறப்பான மேய்ப்புப் பணி தொடர்பாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
புதிய பணிகளுக்கு அடையாளமும் அர்த்தமும் கொடுக்கும் வகையில் அருட்பணி பீற்றர் ஜித்தேந்திரன் அடிகளாரை திருமுழுக்கு அளிக்கும் இடத்துக்கும், ஒப்பரவு அருட்சாதனம் நிறைவேற்றும் இடங்களுக்கும் அழைத்துச் சென்று, திருத்தைலம் பூசி நலம் அளிக்கும் பணி, அருள்வாக்கு பகிரும் போதிக்கும் பணி, திருப்பலி ஒப்புக்கொடுக்கும் உன்னதமான பணி போன்றனவற்றை நினைவுபடுத்தி கத்தோலிக்க தமிழ் மக்களுக்கான தூய ஆரோக்கிய அன்னை பங்கை நிர்வகிக்கும் பணியை அவரிடம் ஓப்படைத்தார்.
இறைமக்களும் இப்பணியினை செவ்வனே செய்ய ஒத்துழைப்பு வழங்குவதாக இறைவனின் துணையை வேண்டி உறுதி கொடுத்தனர். தொடர்ந்து திருப்பலி சிறப்பாக இடம்பெற்றது. திருப்பலியைத் தொடர்ந்து தூய ஆரோக்கிய அன்னை பங்கில் சிறப்பாகப் பணி புரிந்த ஐந்து பிரமுகர்களான, நிலை வாழ்வு பெற்ற அகஸ்ரின் ஜெயநாதன், நிலைவாழ்வு பெற்ற மரியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை, பீடப்பரிசாரகர் அமைப்பில் பணிபுரிந்த சேவியர் றொசாரியோ பிரான்சிஸ், பங்கு சபையின் தலைவராகப் பணிபுரிந்த இராசநாயகம் செபஸ்ரியாம்பிள்ளை, பாடகர் குழாம் பொறுப்பாக பணிபுரிந்த கார்மலிற்றா பற்றிக் ஆகியோருக்கும், பங்கின் ஆரம்பத்தில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த இராஐரட்ணம் அடிகளாருக்கும் சிறப்பு விருதுகள் ஆயர் அவர்களால் வழங்கப்பட்டது.
ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் ஆலய மண்டபத்தில் விருந்துபசாரம் இடம்பெற்று எல்லோரும் மனநிறைவுடன் இல்லம் சென்றனர்.