தவக்காலம் 2006




இவ்வருடம் 2006ம் ஆண்டு, மார்ச்மாதம் 1ம் திகதி, கிறீஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகிறது. தவக்காலம் என்றால் என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். கிறீஸ்தவர்கள் வணங்கும் இயேசுக்கிறீஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் தியானித்து, உடலையும் உள்ளத்தையும் ஒறுத்து, நற்கிரிகைகளைச் செய்து, நோன்பிருந்து வழிபடும் காலம் இந்தத் தவக்காலம் (Season of Lent) மார்ச் மாதம் 1ம் திகதி, புதன்கிழமை, விபூதிப் புதன் (Ash Wednesday) என்று அழைக்கப்படும். இது தவக்காலத்தை ஆரம்பித்து வைக்கும் நாள்.

சென்ற வருடம் குருத்தோலை ஞாயிறன்று பக்தர்களுக்கு வழங்கப்பட்ட குருத்தோலைகளின் காய்ந்த வடிவங்களை எரித்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலை ஆசீர்வதித்து, விபூதியாக ஒவ்வொருவர் நெற்றியிலும் பூசி, ‘மனிதனே நீ மண்ணிலிருந்து பிறந்தாய், மண்ணுக்கே திரும்புவாய்’ என்று குருவானவர் ஞாபகப்படுத்துவார். விபூதிப்புதனில் ஆரம்பிக்கும் இந்தத் தவக்காலம், 140 நாட்களின் பின்னர், கிறீஸ்து பெருமான் இறந்த நாளாகக் கொள்ளப்படும் பெரிய வெள்ளிக்கிழமையுடன் (Good Friday) நிறைவுக்கு வரும்.

ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை 9ம் திகதி, குருத்தோலை ஞாயிறு (Palm Sunday) என்று அழைக்கப்படுகிறது. இயேசுக்கிறீஸ்து தனது இறுதிக் காலத்தை அறிந்த பின்னர், தனது அப்போஸ்தலர்கள் 12 பேருடனும் இணைந்து மகிழ்ச்சியான ஊர்வலத்தில் பங்கேற்றதுடன், இறுதி இராவுணவிலும் கலந்து கொள்கின்ற நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்த அவரது கைது, பாடுகள், சிலுவையில் மரணம், கல்லறையில் அடக்கம் என்ற அனைத்தும் இந்த இறுதி வாரத்தில் (Holy Week) நினைவு கூரப்படுகிறது.

குருத்தோலை ஞாயிறான ஏப்ரல் 9ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் வாரத்தை, கிறீஸ்தவர்கள் புனித வாரம் என்றும், தூய வாரம் என்றும், பெரிய வாரம், பெரிய கிழமை என்றும் பலவிதமான பெயர்களில் அழைத்தாலும், அனைத்துமே, இயேசுவின் இறுதித் துன்ப நிகழ்வுகளையும் சிலுவை மரணத்தையும் குறிக்கும் நிகழ்வுகளைத் தியானிக்கும் வாரத்தையே குறிக்கிறது.

இப்புனித வாரத்தில் வரும் நாட்களை, முறையே பெரிய புதன், பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனி என்று அழைப்பதுடன் அதைத் தொடரும் ஞாயிற்றுக்கிழமையில் இயேசுவின் உயிர்ப்பைக் குறிக்கும்  ஈஸ்ரர் விழாவைக் (Easter) கொண்டாடுவதுடன் இந்தத் தவக்காலம் நிறைவு பெறுகிறது. இவ்வருடம் உயிர்ப்பு விழா (ஈஸ்ரர் தினம்) ஏப்ரல் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இத்தவக்காலத்தில், இயேசுக் கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும், நமது மண்ணின் நிகழ்வுகளோடும், உலகின் பலவித சமூகப் பிரச்சனைகளோடும் இணைத்து, நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

இத்தவக்காலத்தில், கிறீஸ்தவர்கள் நோன்பிருப்பதும், மச்சம் மாமிசத்தை முற்றாகத் தவிர்ப்பதும், பல நன்மைத் தனங்களைச் செய்வதும், கோபக்காரர்கள் எதிரிகளுடன் சமரசம் செய்து கொள்வதும், தானதர்மங்களைச் செய்வதும், இவற்றுடன் அவசியம் ஆலயம் சென்று வழிபாடுகளில் பங்கேற்பதுடன், வீட்டிலும் குடும்ப செபங்களிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவதும் வழமை.

இத்தகைய வழிபாடுகளில் முதன்மை வகிப்பது இயேசுவின் சிலுவைப் பாதையே (Way of the Cross). ஆலயத்திற்குள்ளே, அல்லது ஆலயத்தைச் சுற்றி, அல்லது ஒரு இடத்தில் இருந்தவாறே, இயேசுக் கிறீஸ்துவின் பாடுகள் மரணத்தை ஒவ்வொரு அங்கமாகத் தியானித்து வழிபடுவதை சிலுவைப்பாதை என்றழைப்பார்கள்.

கொடிய யூத ஆட்சியாளர்களால், காரணமின்றி இயேசுக்கிறீஸ்துவுக்கு மரணத்தீர்ப்பு வழங்கப்படுகின்ற நிகழ்விலிருந்து, இயேசு மரணித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழும்வரை மொத்தம் 15 அங்கங்களாக இவற்றைத் தியானிப்பார்கள். ஸ்தலம் என்றும், பாதை என்றும், நிலை என்றும், சிந்தனை என்றும், அங்கம் என்றும் பலவிதமாக அழைக்கப்பட்டாலும், எல்லாமே மொத்தத்தில் இயேசுவின் பாடுகளைத் தியானிக்கும் ஒரே விடயங்களையே உள்ளடக்கி நிற்கின்றன.

இந்த சிலுவைப்பாதையை சமூகத்துடனும் இயற்கையுடனும் மனித மாண்புகளுடனும் இணைத்து இங்கே வழங்குகின்றோம். வீட்டிலும் ஆலயங்களிலும் பயன்படுத்த உகந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.



இயேசுவின் சிலுவைப் பாதை


சிலுவைப் பாதையின் போது, தியானிக்கும் ஒவ்வொரு ஸ்தலத்தின் ஆரம்பத்திலும் எழுந்து நின்று, பின்வரும் செபத்தை சொல்வார்கள்:

முதல்வர்: திவ்விய இயேசுவே, உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கின்றோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது திவ்விய இரத்தத்தைக் கொண்டு இவ்வுலகத்தை மீட்டு இரட்சித்தீரே சுவாமி!

ஒவ்வொரு ஸ்தலத்தின் முடிவிலும் எல்லோரும் இணைந்து பின்வரும் செபத்தைச் சொல்வார்கள்:

எங்கள் பேரில் தயவாய் இரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாய் இரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவது!


01 இயேசு மரணத்திற்குத் தீர்வையிடப் படுகிறார் (மாற்கு 15:15)

இயேசுவே உமக்கு மரணத் தீர்வையிட்டதற்கான காரணம் மிகவும் உறுதியில்லாதது. நீர் மக்களை வரையறையின்றி அன்பு செய்தீர். துன்புற்றோருக்கு உயிரூட்டமும் அமைதியும் கொடுத்தீர். எல்லைக் கோடுகளில் அல்லலுற்றோரை வாழ்வின் மத்திய பகுதிக்கு இட்டுச் சென்றீர். இது பதவியிலிருந்தோரைப் பயமுறுத்தியது. பிலாத்து உமது உண்மை நிலையை அறிந்திருந்தும் தன் பதவியினிமித்தம் உமக்கு மரண தண்டனை விதித்தான்.

எண்ணற்ற மக்கள் உலகெங்கும் சிறைப்படுத்தப் படுகிறார்கள் - சுட்டுக் கொல்லப் படுகிறார்கள். கொடிய அடக்கு முறைக்கெதிராகவும் அத்தியாவசிய மனித உரிமைகளுக்காகவும் வாழ்வின் அடிப்படை - அவசிய தேவைகளுக்காகவும் போராடி மடிகிறார்கள். இதை அறிந்திருந்தும் ஆட்சியிலுள்ளோர் தம் பெயர் பதவிக்காக ஏதமறியாத அப்பாவி மக்களை மறைத்தும் கெடுத்தும் அழித்தும் வருகிறார்கள்.

இந் நிலையிலும் இதனால் நேரடிப் பாதிப்புக்குள்ளான இவர்களை நேசிக்கும் அன்பு நெஞ்சங்களும் உறவினர்களுமே இதற்காக குரல் கொடுக்கிறார்கள்- அழுது சத்தமிடுகிறார்கள்.

அப்பாவி மக்கள் உம்மைப் போலவே பலிக்கடாக்களாகிறார்கள். இதை அறிந்தும் நாம் அமைதியாக ஊமைகளாக இருக்க வேண்டுமா ?

02 இயேசு அனைவராலும்கைவிடப் பட்ட நிலையில் சிலுவையை ஏற்கிறார் (யோவான் 19:17)

என்றுமே உம்மை விட்டுப் பிரியோம் என்றோரெல்லாம் எங்கே இயேசுவே? இவர்களெல்லாம் உமக்கு விசுவாசமாக நடித்தவர்களா? பெண்களும் ஆண்களும் அனைவரும் உம்மை விட்டு ஒரேயடியாக ஓடி ஒழிந்து விட்டனரே! நீர் அங்கே அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் நளினத்திற்கும் வெட்கத்திற்கும் உரியவராகத் தாழ்த்தப் பட்ட நிலையில் தனியனாகச் சிலுவையை ஏற்றுக் கொண்டீரே !

தனிமையும் தனிமைப்படுத்தப் படுதலும் எம்மைச் சுற்றி விரைவாக சுழன்று வளரும் நோய்கள். உளவியல் நோய்கள், மருந்துகள் கண்டறியப்படாத சார்ஸ் போன்ற விநோத நோய்கள், எய்ட்ஸ் போன்ற கொடூர உயிர்க்கொல்லி நோய்களினால் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் மூன்றாம் உலக வறுமையில் வாடும் மக்களே. இவர்கள் ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ள வசதியற்ற வெறுமையின் பாலங்கள். இவர்களிடையே உயிர்வாழ்வதற்கான சக்தியற்ற தவிர்க்க முடியாத மரணப் போராட்டம். வயோதிபர் மனநோயாளர் ஊனமுற்றோர் தாய்ப்பேறானோர். எமது வெற்றிகள் இவர்களை நோக்கிய எமது பார்வைகளை மறைக்கிறது. நாம் ஓடி ஒழிந்து கொள்கிறோம்.

இயேசுவே எமது தேவைகளில் நாம் ஒருவரொருவருடன் இணைக்கப் பட்டுள்ளோம். இத் தேவைகளின் பாலமாக மாற எமக்கு மனமாற்றத்தைத் தந்தருளும்.

03 இயேசு முதல் முறை சிலுவையினால் நசிக்கப்படுகிறார் (லூக்காஸ் 4:19)

அனைவரும் நேரான பாதையிலே நிமிர்ந்து செல்ல வேண்டுமென்று நீர் ஆசைப்பட்டீர். அதற்காக உழைத்தீர். 18 வருடமாக முதுகு வளைந்த நிமிர முடியாத பெண்ணை நீர் கண்ட போது அவளை உம்மிடம் அழைத்து தொட்டுக் குணமாக்கி நிமிர்ந்து நடக்க வழி செய்தீர். இப்போது உமது முதுகு சிலுவையின் பாரத்தால் நசுக்கப்படுகிறது. நீர் விழுந்து கிடக்கிறீர்.

அன்பும் சமாதானமும் நிறைந்த இறைவனின் அரசு ஏழைகளுக்குக் கிடைக்க தங்களையே கொடுத்து அயராது உழைத்த சமூகத் தொண்டர்களும் மனித நேயமுள்ள இதயங்களும் குருக்கள் துறவியரும் ஏழைகளின் மனத்தைரியத்திற்காக தங்களையும் அவர்களுடன் இணைத்துக் கொண்டார்கள். மக்களின் வாய்களைக் கட்டிய கடிவாளங்களை எடுத்தெறிய முனைந்தார்கள். எத்தனையோ ஆயிரம் சமூகத் தொண்டர்கள் உலகெங்கும் பதிவிலில்லாமல் பலியாகி வருகிறார்கள். இப்படிப் பலியாகும் ஆயிரமாயிரம் இதயங்களுடன் இயேசுவே நீரும் உம்மை காரணமின்றிப் பலியிட்டீர்.

இயேசுவே எங்கெல்லாம் உயிர் வாழும் உரிமை மறுக்கப் படுகிறதோ அங்கே நாம் துணிந்து உரிமைக்காகக் குரல் கொடுக்க உமது வரத்தைத் தாரும்.

04 தாயும் மகனும் (லூக்காஸ் 2:51)

உம் தாய் உம்மைப் பார்க்கிறார். நீரும் அவரைப் பார்க்கிறீர். உம்மை அவர் கருத்தாங்கி மடியில் தாங்கிப் பெற்றெடுத்தார். உம்மைக் கண்காணித்து வளர்த்தார். உமது எதிர் காலத்தைப் பற்றி தன் இதயத்தில் எத்தனையோ கற்பனைகளை வடித்தார். ஐயோ இங்கே இந்தக் கோலத்தில் தன் மகனைக் காண்கிறாள். அவரது சொந்த மகன் பலாத்காரம் செய்யப்பட்டு விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டு பாரிய அடிகாயங்களுடன் கொடிய வேதனையில் தள்ளாடி நடந்து வருகிறார்.

தாய் தன் மனதில் புதிய நிலைப்பாடுகளை உள்ளெடுத்துப் பார்க்கிறார். தன் சொந்தக் குழந்தைக்கு உணவு இல்லையே என்று சொல்ல வேண்டிய கட்டாய நிலையில் வெறும் கையாக நிற்கும் பாதிக்கப்பட்ட தாய். வருமானம் தொழில் ஏதுமின்றி குழந்தைக்கு மருந்து வாங்கத் துடிக்கும் தந்தை. வறுமையினால் ஊனமுறும் குழந்தைகளைப் பார்க்கத் துடிக்கும் பெற்றோர். இவை உலகெங்கும் ஒரு சில தடவைகள் அல்ல ஓராயிரம் தடவைகள் தோன்றி மறையும் நிஜங்கள்.

இயேசுவே இத்தகைய மனவேதனையில் துடிதுடிக்கும் பெற்றோருடன் எம் பங்களிப்பையும் பகிர்ந்து கொள்ள உம்மை மன்றாடுகின்றோம்.

05 அன்னியனின் உதவி (மாற்கு 15:21)

உமது கால்கள் இடறுகின்றன. சக்தி சிறிது சிறிதாக வலுக் குறைகிறது. சிலுவை மேலும் பாரமடைகிறது. உம்மோடு செல்லும் சிப்பாய்கள் அதைக் கண்கூடாகக் காண்கின்றனர். எனினும் எதுவித உதவியையும் அவர்கள் பரிமாறத் தயாராக இல்லை. பதிலாக உமது பாரங்களை சுமக்க யாரோ ஒரு அன்னியனைக் கட்டாயப் படுத்துகின்றனர். அவனால் அதைத் தாங்க முடியவில்லை. உமது சிலுவையின் சுமை அன்னியனுக்குப் புதிதல்ல.

ஒரு அன்னியன் உதவி செய்யக் கட்டாயப் படுத்தப் படுகிறான். இராணுவ முகாம்களில் கட்டாயத்தில் துன்புறும் அப்பாவி மக்கள். குழந்தையின் பசி அழுகை தாங்காது கடற்கரையில் மட்டி பிடிக்கச் சென்ற ஏழை மீனவன். பனையிலிருந்து கட்டாயமாக இறக்கப்;பட்ட ஏழை மதுபான வியாபாரி. வீட்டுத் தோட்டத்திலே காய்கறி பறிக்க முயன்ற ஏழை விவசாயியின் இரண்டு பிள்ளைகள். இவர்கள் முகாம்களிலே கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். எதிரியை அழிக்க வீசப்பட்ட குண்டுகளுக்கு இரையாகும் அப்பாவி ஜீவன்கள், பெற்றோரின்றி, உறவின்றி, துடிதுடித்து மடிகின்றன.

அடிமைத்தனம் ஒழிந்து விட்டதாக பறைசாற்றினாலும் மேலை நாடுகளில் நிலவும் இன நிற வெறி - வெளிநாட்டவர் பெறும் வெறுப்பான வரவேற்பு. கொடுமை இறைவா!

இயேசுவே சிறுபான்மையினர் எல்லா இடங்களிலும் நசுக்கப்படுகிறார்கள். நாம் அவர்களை எமது சகோதர சகோதரிகளாகப் பார்க்க பாவிக்க மனமாற்றம் தாரும்.

06 ஒழிந்து கொண்ட சமூகத்தில் வெரோணிக்காளின் துணிகர உதவி (மத்தேயு 25:40)

உமது முகத்தில் இரத்தம். உமது துன்பத்தில் பங்கு கொள்ள உண்மையிலேயே அங்கு யாருமில்லையா? ஆம். ஒரு பெண் - அவள் துணிகிறாள். சிப்பாய்களின் வெறியாட்டத்தைத் துச்சமென மதித்து துணிவுடன் உம்மிடம் வருகிறாள். அவள் மட்டுமே உமது காயப்பட்ட முகத்தை - இதயத்தைப் பார்க்கிறாள். ஒரு துணியால் உமது முகத்தை மிகவும் பரிவுடன் துடைக்கிறாள்.

உலகின் பல பகுதிகள் வரண்டு கிடக்கின்றன. பலரின் இதயங்களும் கூடத்தான். வாழ்க்கை ஒரு சுமையாகி விட்டது. உணவில்லாமல் இறப்பதுடன் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். இனப் போராட்டத்திற்குள் சிக்குண்டு அல்லலுறுகிறார்கள். எப்படியான துன்பம் அவர்களுடையது! அவர்களுடைய இரத்தம் தோய்ந்த முகத்திலிருந்து இயேசு எம்மைப் பார்க்கிறார்-அழைக்கிறார். அவர்களின் உருவங்கள் இயேசுவின் உருவங்களே. இயேசு துன்புறுவோரின் சகோதரன். வல்லரசை ஆதிக்கம் செய்யும் இதயங்கள், வரட்சியில் துடித்து மாண்டு போகும் ஏழை அடிமைகளை ஒரு விநாடி ஏறெடுத்துப் பார்ப்பார்களா ?

இயேசுவே அங்கு மரண அவஸ்தையுறும் மக்களின் கண்களிலும் இதயத்திலும் அன்பையும் ஏக்கத்தையும் காண எமக்கு வரம் தாரும்.

07 மீண்டும் நிலம் நோக்கி சரிகிறார் (மத்தேயு 6:11)

வீதி தூரமாகிக் கொண்டே போகிறது. நிலம் கூட உம்மைத் தாங்கவில்லை. நிலத்தை உம்மால் உணர முடியாதபடி உடல் வேதனை. நீர் மீண்டும் விழுகிறீர். உமது வாழ்நாள் பூராக ஒரு சிறு காணி சொத்து ஏதுமின்றி வாழ்ந்தீர். இரவில் தூங்கக்கூட உமக்கென ஒரு படுக்கை இருக்கவில்லை. நாளாந்த உணவைத் தரும்படி செபிக்கக் கற்றுக் கொடுத்தீர். மிகவும் கண்காணிப்பு நிறைந்த தந்தையும் பாதுகாப்பு நிறைந்த தாயுமாகிய உமது சொந்தத் தந்தையாகிய இறைவனில் நம்பிக்கை வைக்கும்படி எமக்குப் படிப்பித்தீர். அவரே அனைவரையும் ஆதரித்துக் காக்கிறார்.

நாட்டின் நிலமனைத்தும் பெரும்பான்மைக்கே சொந்தம் என்றால் எங்கிருந்து எமக்கு அன்றாட அப்பம் கிடைக்கும்? உலகின் சிற்றரசுகள், வல்லரசை நம்பி வாழும், வாடும் காலம் என்றுதான் மாறும்? நாளாந்த உணவுத் தவிப்பு ஏழை விவசாயிகளை வீதிக்குக் கொண்டுவந்து விட்டது. ஒரு சிறு நிலம் மட்டும் தரும்படி அவர்கள் கெஞ்சுகிறார்கள். அதைக் கொடுத்தால் பதவி பறிபோய் விடும் என்று பயப்படுகிறது அரசு. இந்த வயிற்றுத் தேவை சிறுவர் சிறுமியரை போராட்ட முனைக்கு இட்டுச் செல்கிறது. ஏனையவர்களை பாவத்தினூடே பணம்பண்ணத் தூண்டுகிறது. உணருமா பெரும்பான்மைகள் ?

இயேசுவே எமக்கு எம் அன்றாட அப்பத்தைத் தாரும். மீதியான அனைத்தும் அடுத்தவர்களின் தேவைக்காகக் கொடுக்கும் நல் மனத்தைத் தாரும்.

08 பெண்கள் ஓலமிடுகிறார்கள் (லூக்காஸ் 23:27)

வீதியோரங்களிலே ஏழைப் பெண்கள். நீர் எவ்வளவு தூரம் ஏளனம் செய்யப் பட்டு துன்புற்றிருக்கிறீர் என்பதை அவர்கள் காண்கிறார்கள். ஓலமிட்டு அழுகிறார்கள். உம்மை பகிரங்கமாக அறிக்கையிட்டவர்கள் இப்போது பயமுறுத்தப் படுகிறார்கள் - பகிரங்கமாக கைது செய்யப் படுகிறார்கள். இப் பெண்கள் தங்களைப் பற்றிக் கவலைப் படவில்லை. உமது துன்பத்திற்காக அழுகிறார்கள். நீர் இவர்களது துன்பமான எதிர்காலத்தை அறிந்து கொள்கிறீர். பெண்களே எனக்காக அழ வேண்டாம். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

உலகெங்கும் பெண்கள் முறையிடுவதற்குக் காரணம் இருக்கிறது. கஸ்டத்தின் பெரும் பகுதி அவர்களையே சென்றடைகிறது. குடும்பத்தின் முழுப்பாரமும் பெண்களையே சுற்றிக் கொள்கிறது. ஆண்கள் முகாம்களிலே முடங்கிக் கிடக்கிறார்கள் அல்லது கொலை செய்யப் படுகிறார்கள். கலவரங்களிலும் யுத்தங்களிலும் போராட்டத்திலும் இறந்துபோகும்; இதயங்களை நம்பி வாழும் குடும்பங்களின் நிலை என்ன? இவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறிகளாகி விட்டன. பொதுத் தேவைகளின் அத்தியாவசியத்திலேயே மனிதப் போராட்டம் பிறக்கிறது. பெண்கள் குரல் கொடுக்கிறார்கள். துன்புறும் மக்களின் தற்போதைய மாபெரும் சக்தி பெண்களே.

இயேசுவே நாமும் இப் பெண்களைப் போல் சமூக நீதிக்கும் சுதந்திரத்திற்கும் குரல் கொடுத்து நல்ல எதிர் காலத்தை உண்மையாக்க வரம் தாரும்.

09 கைவிடப்பட்ட நிலையில் கீழே விழுகிறார் - அடி அவர் மேல் விழுகிறது (மாற்கு 9:37)

நீர் மரணத்தின் பிடியை அண்டி விட்டீர். வீதியிலே வீழ்ந்து கிடக்கிறீர். ஆதரவற்ற குழந்தைகள் போல வீதியிலே சரிகிறீர். குழந்தைகள் உமக்கு முக்கியமானவர்கள். நீர் களைத்திருந்த போதும் குழந்தைகளை அரவணைத்து அன்பு காட்டினீர். இவர்களிலே உமது புதிய உலகத்தை அமைப்பதாக தெளிவாக சொன்னீர். முகாம்களிலே தப்பாகப் பாவிக்கப்பட்ட குழந்தைகள் கற்பழிக்கப்பட்ட இளம் சிறுமிகள் போலே வீதியிலே வைத்து சிப்பாய்கள் உம்மை சமைக்கிறார்கள்.

குண்டு வீச்சில் குழந்தைகள் துண்டு துண்டாகப் பிய்த்தெறியப் பட்டார்கள். பெற்றோருக்கிடையே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை செல் அடியில் தூளாகிப் பறந்தது. ஆயிரமாயிரம் குழந்தைகள் பிச்சையெடுக்கவும் வசதியின்றி மடிகிறார்கள். பாதுகாப்பற்ற இடங்களிலே பாதுகாப்புக்காக ஓடி ஒழிக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் பல சிறுவர் சிறுமியர் தேடிக் கைது செய்யப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டு கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு மடிகிறார்கள். இதை செய்பவர்கள் ஜனநாயகம் என்றும் சமதர்மம் என்றும் குரல் கொடுக்கிறார்கள்.

இயேசுவே குழந்தைகளைத் துன்புறுத்தும் சமூகம் அவர்களின் எதிர்காலக் கனவுகளை நினைத்துப் பார்க்க அவர்களின் மனக் கண்களைத் திறந்தருளும்.

10 உடையைக் களவாடுகிறார்கள் (மத்தேயு 27:35)

இரக்கமின்றி உம்மை கசையால் வதைத்தார்கள். இப்போது உமது இறுதிப் பாதுகாப்பான உமது உடையைத் தமக்கிடையே பங்கிடுகிறார்கள். அங்கே நீர் நிர்வாணமாக மிகவும் கீழ்மைப் படுத்தப்பட்டு நிற்கிறீர். ஒரு மரத்திலிருந்து இலைகளை வெட்டி கிளைகளை வெட்டி மரத்தையே வெட்டி இப்போது வேரையும் பிடுங்குகிறார்கள். அந்த மரம் துடித்து மடிகிறது.

காடுகள் மட்டுமல்ல, நாடுகளும் தோட்டங்களும்கூட குண்டு வீச்சினால் அழிக்கப் படுகின்றன. அதனால் கடும் வரட்சி. மழையில்லை. காட்டிலுள்ள உயிரினங்கள் இறக்கின்றன. சிற்றாறுகள் குழங்களிலே நச்சுத்தன்மை கொண்ட செல் குண்டுகள் விழுவதனால் அதைப் பருகி ஏழை மக்களும் ஏனைய உயிரினங்கள் பிராணிகள் பூச்சி புழுக்களும் இறக்கின்றன. இது நாளைய சமுதாயத்திற்கே பெரும் பயங்கரத்தை உருவாக்கியுள்ளது. இதைப் பகிரங்கமாகச் சுட்டிக் காட்டிய பலர் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார்கள்.

இயேசுவே மக்களும் உயிரினங்களும் அமைதியான சூழலிலேயே உயிர் வாழ முடியும். உயிர்களை மதிக்கும் மனப்பக்குவத்தைத் தர உம்மை இறைஞ்சுகிறோம்.

11 சிலுவையில் அறையப் படுகிறார் (மத்தேயு 6:24)

அத்தனை சக்தியையும் பாவித்து உம்மை சிலுவையில் அறைகிறார்கள். உமது உயிர் ஊசலாடுகிறது. இருந்தும் நீர் மனம் தளரவில்லை. உமது இறுதித் துளி இரத்தம் வரை உமது செய்தியை உமது இலட்சியத்தை நிலை நாட்டுகிறீர். கடவுளுக்கும் தீய சக்திகளுக்கும் நடுவே சிலுவையில் ஓர் பாலமாகத் தொங்குகிறீர். பதவி பணத்தை நீர் ஒரு போதுமே விரும்பியதில்லை. வாழ்வின் நிறைவை இறுதி வரை போதித்தீர். இறைவன் தம் கவனிப்பில் ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் நிறைவை அடைய விரும்புகிறார். இதற்கு எதிராக கொலையாட்டம் போடும் கும்பல் இறைவனுக்கு எதிராக கரகோசம் செய்து உம்மை சிலுவையில் ஏற்றுகிறார்கள்.

வறுமையான வடகிழக்கும் வசதியான தென்மேற்கும். இது எமக்குப் பரிச்சயமான சொற்களே. இது வருடாவருடம் உக்கிரமடைந்து பின்னோக்கி செல்கிறது. வட அமெரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை போன்றன கொடுக்கும் பாரிய நீண்ட காலக் கடன்கள் ஆயதக் கொள்வனவுக்கும் பாதுகாப்புக்குமே பாவிக்கப் படுகின்றன. பொருளாதார மூலதனத் திட்டங்கள் தென்மேற்குப் பகுதிகளுக்கு மட்டுமே உரியனவாகி விட்டன. நாளை இக் கடன்கள் இலங்கையின் அனைத்து மக்களையும் பாதிக்கப் போகிறது என்பதை பெரும் பான்மையினம் உணருமா?

இயேசுவே இரு இனங்களுக்கு ஒரு அரசிடமிருந்து இரு வேறுபட்ட திட்டங்கள். அரசிற்கு மனமாற்றம் கொடுக்க உம்மை வேண்டுகின்றோம்.

12 சிலுவையில் மரணம் (மாற்கு 15:37)

உடைந்து போன உலகம் போல எந்தத் தற்காப்புமின்றி அவர்களின் அதிகாரத்திலே சிலுவையில் தொங்குகிறீர். நெஞ்சில் நெருப்பை வாங்கி சுவாசிக்கிறீர். உம்மிடம் எதுவுமே இல்லை. வெறுமையின் அவலம். அன்புக்கும் நீதிக்கும் பிறப்பிடமான நீர் அகதியாக அங்கே தொங்குகிறீர். பகிர்ந்துணர்வின் (Solidarity) உச்சக்கட்டமாக கேவலமான உமது சிலுவைச் சாவின் மூலம் துன்புறும் அனைத்துத் தமிழருடனும் அவர்கள் துன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறீர்.

இருண்ட துன்பத்தில் சிக்குண்டிருக்கும் போது, முகாம்கள் காடுகளிலே தத்தளிக்கும் போது, பட்டினியால் வீதியிலே சாவுக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது எம் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள இயேசு எம்மிடம் வருகிறார். மிகவும் கேவலமான சிலுவைச் சாவை ஏற்றதன் மூலம் இதற்கு மேல் துன்புற இடமில்லை என்று நிரூபித்தார். அங்கிருந்து எமக்கு அன்பையும் நம்பிக்கையையும் அள்ளித் தந்தார். பழுதுபட்ட ஈழத்திற்கு புது ஒளியும் வாழ்வும் இயேசுவிடமிருந்து வருகிறது.

இயேசுவே உமது கொடிய துன்பத்தின் மூலம் பகிர்ந்துணர்வை வெளிப்படுத்தனீர். நாமும் பகிர்ந்துணர்வை எம்மிடையே வளர்க்க வரம் தாரும்.

13 நம்பிக்கையின் விளை நிலம் தாய் (யோவான் 12:24)

உமது மரணத்தின் போது பயந்து ஒழித்துக் கொள்ளாமல் முன்வந்தவர்களில் உமது தாயும் ஒருவர். குழந்தையாக அவள் மடியில் புரண்டு விளையாடினீர். இன்று உமது உயிரற்ற உடலை கையில் மடியில் தாங்கி மனவேதனைப் படுகிறாள். அவளது முகம் அமைதியின் சோகத்தில் துடிக்கிறது. உமது கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்க்கிறாள். உமது தந்தை உம்மூலம் இவ்வுலகிற்கு அனுப்பிய புதிய ஒளியையும் வாழ்வையும் நீர் தெளிவாகக் கொடுத்து விட்டீர் இதைப் புரியாதோர் பலர் நகைக்கிறார்கள் புரிந்து கொண்ட உம் தாய் துடிக்கிறாள்.

அநீதியையும் துன்பத்தையும் எதிர்கொள்ள துணிவும் மனத் தைரியமும் அவசியம். ஆனால் எம் சுகந்திரத்தை வென்றெடுக்க இவைகளே முதற் படிகள் இதைப் பலர் இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும்கூட, வசதிக்காகவும் பதவிக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் இவர்கள் புரிந்தும் புரியாதது போல நடிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் முழுமையான ஒன்று பட்ட சுகந்திரத்தை வென்றெடுக்க இவர்கள் துணிவும் மனத்தைரியமும் பெறுவார்களா?

இயேசுவே அநீதியையும் துன்பத்தையும் எதிர் கொள்ள எமக்கு மனத் துணிவைத் தாரும். துன்பத்தில் வாடும் அப்பாவி மக்களை நோக்கி எம் மனக் கண்களைத் திருப்பியருளும்.

14 இருள் - அடக்கம் (மத்தேயு 27:59)

அவர்கள் உம் உடலை நிலத்திற்குக் காணிக்கையாக்க துணியிலே சுற்றி விட்டார்கள். பிணவாடை அடிக்க ஆரம்பித்து விட்டது. துன்பத்தில் சிக்குண்டு மார்பில் அடித்து அழுகிறார்கள். ஆனால் இது மிகவும் பிந்திய சிந்தனை-ஞானோதயம் அல்லவா? நீர் சில நாட்களுக்கு முன்னர் கேவலமாகக் கைது செய்யப்பட்ட போது ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை? இப்போது உமது மரணத்திற்குத் தாங்களே காரணம் என்று சிறிது உணருகிறார்கள்.

அணு உற்பத்தி ஓசோன் படலத்தில் உருவாகியுள்ள பாரிய சிதைவுகள் அசிற் பாவிப்பினால் பெய்யும் மழை காட்டுத் தீ நச்சுத்தன்மையான செல் தாக்குதல் பிணங்களினால் சிதைவுகள். அணுகுண்டுகளும், நியூக்கிளியர் விஷவாயுக்களும், கொடிய குண்டு வீச்சுக்களும் இப்பூமியின் இயல்பையே நிலைகுலையச் செய்துள்ளன. பூமியின் அழிவு அண்மித்து வருவதாக அவதானிகள் கூறுகிறார்கள். விஞ்ஞானம் இவற்றை வெல்லும் என்ற கூற்று பொய்யாகி வருகிறது. எமது சிந்தனையற்ற வாழ்வு உலக நிலைப்பாட்டை விரைவாகப் பாதிக்கிறது. இருந்தும் யாரும் இது பற்றி குரல் கொடுப்பதாக இல்லை. குரல் கொடுத்தும் அதைக் கேட்கும் நிலையில் வல்லரசுகள் இறங்கி வருவதாக இல்லை.

இயேசுவே சுயநலம் மறந்து அமைதியான உலகத்திற்காக - உலக சமாதானத்திற்காக குரல் கொடுக்க வரம் தாரும்.

15 வாழ்விற்கு விழிப்பு (லூக்காஸ் 24:5)

இதோ நீர் மீண்டும் வந்து விட்டீர். உம்முடன் வாழ்ந்தவர்கள் உம்மை அன்பு செய்தவர்கள் அனைவரும் உம்முடன் இருக்கிறார்கள். நீர் அப்பத்தைப் பிட்டுப் பகிர்ந்து உங்களுக்குக் சமாதானம் என்று சொல்லுகிறீர். மரணத்தின் சக்தியைப் புதிய வாழ்வாகவே சமாதானத்தின் மூலம் உடைத்தெறிந்து உம்மைப் பின்பற்றுவோரைப் புதுப்பிக்கின்றீர். உமது வார்த்தையின் உண்மையையும் பலத்தையும் அவர்களுக்கு அனுபவ hPதியாகக் கொடுக்கிறீர். நான் இன்றும் என்றும் உலக முடிவு பரியந்தமும் உங்களுடனேயே இருக்கிறேன்.

இயேசு இங்கே இருக்கிறார். அவருடன் அவரை அன்பு செய்து அவருக்காக வாழ்ந்து உயிர் துறந்த அனைவரும் இருக்கிறார்கள். சமூகத் தொண்டிலும் ஏழைகளுக்கான வாழ்தலிலும் தங்களை அர்ப்பணித்தவர்களோடு இன்னும் பல இனிய இதயங்களும் இயேசுவோடு வீற்றிருக்கிறார்கள். அனைவரும் துன்புற்றோரினதும் ஏழைகளினதும் சுதந்திரத்திற்காக எம் பங்கையும் கேட்கிறார்கள். எமக்கு நம்பிக்கையும் பலமும் இருந்தால் அடுத்தவர்களுக்காக, உயிரினங்களுக்காக, இயற்கையின் அழிவுகளுக்காக இன்றே குரல் கொடுப்போம் - பங்களிப்போம்.

இயேசுவே உமது சுதந்திரம் சக்தி அன்பு சமாதானம் மூலம் எம்மை நிரப்ப உம்மை இறைஞ்சுகிறோம்.

(சிலுவைப் பாதையின் இறுதியில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக ரோமாபுரியில் இருக்கும் நம் திருத்தந்தையின் கருத்துக்கள் நிறைவேற கிறிஸ்து கற்பித்த செபம், மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் செபம் சொல்லி, வேண்டுவோம். நம் பாவங்களுக்காக மனம் வருந்தி, நற்கருணை திருவிருந்தில் பங்கேற்போம்.)


(கருத்துக்களுக்கு, ஆக்கதாரரே பொறுப்பு, ஆலயமல்ல!)

தயாரிப்பு:

குயின்ரஸ் துரைசிங்கம்
ஸ்காபரோ

.

HOME
WAY OF THE CROSS IN TAMIL - 2006 VERSION (PDF)
WAY OF THE CROSS IN TAMIL - 2006 VERSION (PDF)