என் அன்பான பங்கு மக்களே,

உங்கள் அனைவருக்கும் எமது புனித ஆரோக்கிய அன்னை பங்கின் சார்பில் மனம் நிறைந்த கிறீஸ்து உயிர்ப்பு விழா வாழ்த்துக்கள்!

‘கிறீஸ்து உயிர்த்தெழவில்லையெனில் எமது விசுவாசமே வீண்’ என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகள் மிகவும் அர்த்தம் பொதிந்தவை. எமது கிறீஸ்தவ வாழ்வு, விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் அன்பிலும் கட்டப்பட்டிருப்பதை, வேதாகமம் பல இடங்களிலும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அத்தகைய வாழ்வை, வெறும் போதனையாக மட்டுமன்றி, நிஜத்திலும் வாழ்ந்துகாட்டியவர் எமது இறைமகன். மிகவும் கீழ்ப்படிதலுள்ள பிள்ளையாக, நம்பிக்கையும் உற்சாகமும் மிக்க இளைஞராக, விசுவாசமும் பக்தியும் கொண்ட மனிதராக, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவிற்கு தன்னைத் தாழ்த்தி, மானிடரின் நிரந்தர மீட்பை உறுதி செய்தார் இயேசு.

எமது பாப்பரசர் 16ம் பெனடிக்ற் அவர்கள் தமது இவ்வருட தவக்காலத்திற்கான செய்தியில், ஒறுத்தலும் நற்பண்பும் கொண்ட வாழ்விற்கு எம்மைத் தயார் படுத்துமாறு அழைப்பு விடுத்தார். கத்தோலிக்க வாழ்வின் மையப்புள்ளியாக, ‘ஈதல்’ என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடும் ‘அடுத்தவருக்கு உதவுதல்’ என்ற பண்பே இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் பாப்பரசர். அடுத்தவர் மட்டில் அக்கறை கொண்டவர்களாக, அன்பு மற்றும் நல்ல செயற்பாடுகள் மூலம் அயலவர்களை நேசிப்பவர்களாக நாம் எங்களைத் தயார் படுத்த வேண்டுமென்பதே பாப்பரசர் எங்களுக்கு விடுத்த அழைப்பு.

இந்த உயர்ந்த பண்பில் நாம் வெற்றி பெறுவதற்கு உழைப்பதே, உயிர்த்த கிறீஸ்துவின் உன்னத விருப்பாக இருக்குமென்பதை நாம் நினைவில் கொள்வோம். மேலதிகமாக இருந்தால் பகிரலாம் என்ற நிலையிலிருந்து இறங்கி வந்து, இருப்பதில் எப்போதும் பகிர்ந்து வாழ, அதன்மூலம் அடுத்தவர்களின் வாழ்விலும் ஒளியேற்ற இந்த உயிர்ப்புவிழா எமக்கு உதவட்டும்.

அயலானை அன்பு செய் என்ற கட்டளையை, எமது தூய கத்தோலிக்க வாழ்வில் இயன்றவரை கடைப்பிடித்து, எங்கெல்லாம் அவசிய தேவைகள் இருக்கின்றனவோ அங்கே நாம் பகிர்ந்து வாழ்பவர்களாக, யாருக்கு அன்பு தேவைப்படுகிறதோ அங்கே அன்பைக் கொடுப்பவர்களாக, எங்கே உறவு அன்நியப்பட்டுப் போகிறதோ, அங்கே புதிய உறவின் பாலங்களாக, எம்மை இறைவனின் பிள்ளைகளாக வளர்த்துக் கொள்ளுவோம். பரஸ்பர புரிதல், நீதி, இரக்கம், அன்பு போன்ற உயர்ந்த குணங்கள் எம்மில் வளர்வதற்கு, ஈதலும், அயலவருடன் இயைந்து வாழ்தலுமே அவசியம் என்பதை பாப்பரசர் தனது செய்தியில் குறிப்பிடுகிறார்.

உங்கள் அனைவருடனும் கிறீஸ்து உயிர்ப்பு விழா மகிழ்வில் இணைந்து கொள்ளுவதுடன், புனித சின்னப்பர் திமோத்தேயுவுக்கு எழுதிய மடலில் கூறியது போன்று கிறீஸ்து எப்போதும் எம்முடன் உயிரோடு வாழ்கிறார் என்பதை நாம் நினைவில் இருத்தி, வருகின்ற நாட்களிலும் எம் புனித வாழ்வைத் தொடர்வோம்.

May the Risen Christ’s Blessings be with you through every day of the year!

உங்கள் பணியில்,


அருட்பணி பீற்றர் ஜித்தேந்திரன்
பங்குத் தந்தை

HOME